பிற்கால நீதிநூல்கள்
தமிழ்நிலம் தொன்மையானது. தமிழ் மக்கள் நிலத்தின் மூத்த குடிகளாவர். அவர்களின் வாழ்வு நனிநாகரிகம் மிக்கது.தமிழ் இலக்கியம் உலகில் மிகச் சிறந்தது.மூத்த மொழி மட்டும் இதன் பெருமையல்ல,இந்திய மொழிகளில் முதன்மையானதும் வளம் பல பெற்று இன்றும் வாழ்வதும் இதன் தனி சிறப்பாகும். சங்ககாலம் தொடங்கி கண்ணதாசன் காலம் வரை , தமிழ் இலக்கியத்தில் நீதி கருத்துகள் கூறப்பெற்றுள்ளன. மனித குல மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் அறக்கருத்துகள் சங்கச் சான்றோர்களால் தெளிவாக கூறப்பெற்றுள்ளன.
பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகை செய்யத்தக்கது மற்றும் செய்யத்தகாதது என மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்ற நூற்றுக்கு மேற்பட்ட அறங்களை வகுத்தும் தொகுத்தும் வழங்குகின்றன. இறைவன் புகழ்பாடும் திருமுறைகளிலும் நீதிகருத்துகளுக்குப் பஞ்சமில்லை. பெருங்காப்பியங்கள் பேசும் நீதிகள் பிற்காலத்தில் பொன்மொழிகளாக போற்றப்படுகின்றன. காலந்தோறும் தமிழ் இலக்கியம் கூறும் அறநெறிகள் மாறிவந்துள்ளன. அவற்றை தமிழ்மொழி பதிவு செய்துள்ளது. இருப்பினும் சில சொற்களால் , சிறிய தொடர்களால் நீதி கூறும் முறை பிற்காலத்தில் தோன்றியுள்ளது.அவை பிற்காலத்தில் நீதிநூல் என வழங்கப்படுகின்றன.
பிற்கால நீதி நூல்கள் திண்ணைப் பள்ளிகளில் பெரிய அளவில் கற்கப் பெற்றுள்ளன. தொடக்கப்பள்ளிப் பாடத்திட்டத்திலும் முதன்மை பெற்று வந்துள்ளது. ஆத்திசூடி , உலகநீதி முதலிய நீதிநூல்கள் பலகால் பலமுறை பதிக்கப்பெற்றுள்ளன. பரணர் தொடங்கி பாரதியார் வரை , கபிலர் தொடங்கி கவிமணி வரை காலத்திற்கேற்ற நீதிக்கருத்துகள் தோன்றினாலும் , பிற்கால நீதிநூல்களின் பெருமை தனிப்பெருமையாகும்.
பிற்கால நீதிநூல்களில் கல்வியைப் பற்றிய கருத்துகள்
மனிதன் தனது வாழ்கை முழுவது செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான்.இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைமண் அளவு;கல்லாதது உலகளவு’ எனும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. ‘கற்கை நன்றே கற்கை நன்றே , பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்னும் வெற்றி வேற்கையில் கல்வியைக் கற்று கொள்வது மிகவும் நன்மை தரும் . பிச்சை எடுக்க நேரிட்டாலும் , கல்வி கற்பது நன்மை தரும் என்பதை உணர்த்துகிறது.
கல்வியை ஒருவன் கற்க தொடங்கும் பொழுது சிறிது துன்பமாகத்தான் இருக்கும். அதுவே கற்க தொடங்கிவிட்டால் இன்பமாக மாறும் என்று நீதிநெறி விளக்கத்தில் தெளிவாகப் பாடப்பட்டுள்ளது.
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடங்கொன்று அறிவகற்றும் கல்வி ...
இந்த பாடல் கூறு கருத்துப்படி தொடங்கும் போது துன்பமாக இருக்கும் கல்வியானது எப்படி இன்பமாக மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? அந்த எண்ணத்திற்கு இப்பாடலைப் பாடிய குமரகுருபரர் விளக்கம் தந்துள்ளார்.நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி.நம்மிடம் இருந்து அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.
நமது அறியாமையை நீக்கி அறிவைப் பெறுக்கி நமக்கு உதவியாக இருக்கின்ற கல்வியானது நால்வகை பயனையும் நமக்குத் தருகிறது. நால்வகை பயன்கள் யாவை என்று பார்த்தால் அறம் , பொருள் , இன்பன் , வீடு என்பவை ஆகும்.இதை,
அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் – உறுங்கவலொன்று
உற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க் குற்ற துணை
என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் உணர்த்துகிறது.
அறம் , பொருள் , இன்பம் என்னும் மூன்றின் வாயிலாகத்தான் மனிதன் வீடுபேறு என்னும் முக்தி நிலையை அடைய முடியும். எனவே நால்வகை பயனையும் கல்வியால் பெற முடியும் என்பதை உணர்த்த குமரகுருபரர் ‘அறம் , பொருள் , இன்பமும்’ என்று தனியாகச் சொல்லி அதன் பிறகு வீடும் என்று பிரித்துக் கூறியுள்ளார்.
கல்வி கற்றவர்கள் மேலே கண்ட நால்வகை பயனையும் அடைவதுடன் உலகில் நல்ல புகழையும் பெறுவார்கள். மேலும் , கவலை ஏற்படும் போது அந்தக் கவலையிலிருந்து மீள்வதற்கு உரிய வழியையும் கல்வி தரும் என்பதையும் குமரகுருபரர் கூறியுள்ளார். இதன் வழி மனிதனுக்குக் கல்வியைத் தவிர வேறு எதுவுமே சிறந்த துணையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கல்வி கற்றவர்கள் தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்கையில் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால் தான் கற்றக் கல்வியால் பயன் உண்டு.கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழதவன் பிறருக்கு அறநெறிகளைக் கூறினால் அவனது உள்ளமே அவனுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுத்துவிடும்.
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படுஉம்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை –சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல்.
அறநெறிகளைக் கற்று , அந்தக் அறக் கருத்துகளைப் பிறருக்கு உரைக்கின்ற ஒருவர் அந்த அறநெறிகளை பின்பற்றாவிட்டால் அவர் கூறுகின்ற உரை வெற்றுரையாகும். இவ்வாறு அறநெறிகளைப் பின்பற்றாமல் வெற்றுரைகளைக் கூறுகின்ற ஒருவரைப் பார்த்து ‘அறநெறிகளை விளக்கும் நீங்கள் அந்த அறநெறிகளைப் பின்பற்ற வில்லையே’ என்று சுட்டிக்காட்ட நேரிடும்.அவ்வாறு நடக்க வேண்டாமென்றால் கற்றவர்கள் தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று நீதிநூல் உணர்த்துகிறது.கற்றப்படி வாழ்கை இருக்க வேண்டும் என்பதை திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார். ‘கற்றபின் நிற்க அதற்கு தக’ என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.ஆகையால் கற்றவற்றை முறையாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டு மேலும் கல்வி கற்பது பயனற்றச் செயல் ஆகும்.
அதனைத் தொடர்ந்து, கல்வியை ஒருவர் முறையாக கற்க வேண்டும்.முறையாக கல்வியைக் கற்காதவர் பின்பு மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருக்கும் சூழ்நிலை நேரிடும். அதனை,
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவயால் நல்ல மரங்கள் – சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டா தவன்நன் மரம்.
கற்றவர் சபையில் மத்தியில் ஒருவர் தரக்கூடிய ஓலைச் சுவடியைப் படிக்கத் தெரியாமலும் ,பிறருடைய குறிப்பை அறிய முடியாமலும் விழித்துக் கொண்டிருந்தால், கிளைகள் கொம்புகளுடன் காட்டில் நிற்கக்கூடிய நல்லமரங்களைப் போன்றவன் ஆவான் என்று மூதுரை உணர்த்துகிறது.
மேலும் நீதிநெறி விளக்கத்தில்,
வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் – கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு
எய்த்துப் பொருள்செய் திடல்
இப்பாடல் துன்பப்பட்டு கற்ற கல்வியை வாழ்க்கைக்குப் பயன்படுத்தாமல் வேறு ஒன்றைக் கற்க தொடங்குவதை , ஓர் உவமை வாயிலாக தெரிவித்துள்ளது. ஒருவன் தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தாமல் மேலும் கற்கத் தொடங்குவது,தனது கையில் உள்ள செல்வத்தை மண்ணில் சிதறவிட்டு,மண்ணுடன் கலந்துள்ளதை எடுத்து, சல்லடையில் போட்டு அரித்து எடுப்பது போன்றது என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.
மேலும், கற்றவர்களுக்கு கல்வியே அழகை கொடுக்கும் . அவர்கள் வேறு அணிகலன்கள் அணிய வேண்டாம்.கற்றவர்கள் மேலும் அணிகலண்களை அணிந்துகொண்டு தன்மை அழகுபடுத்த விரும்புவது நன்கு வடிவமைத்த அணிகலனை இன்னும் அழகு படுத்துவதை போன்றது ஆகும்.
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்.
என்னும் பாடலில் அழகை யாரும் அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். அது போல கல்வி கற்றவர்களுக்கு எந்த அணிகலன்களும் தேவையில்லை என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.
கற்றவர்களுக்குக் கல்வியே மிகவும் பெரிய செல்வமாக திகழ்கிறது. கல்வி எப்படி எப்பொழுது செல்வமாகும் என்பதை பின்வரும் பாடல் தெளிவுபடுத்தியுள்ளது.
கல்வியே கற்புடைப் பெண்ரடிப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீங்கவியாகச் – சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும்
செல்வமு முண்டு சிலர்க்கு
என்னும் பாடலில் கல்வியை கற்புடைய ஒரு பெண்ணாக உருவகம் செய்துள்ளனர். கவிதைவைக் கற்புடைய பெண் ஈன்றெடுக்கும் மகனாகவும் கவிதைக்கு உரிய சொல்வளத்தைச் செல்வமாகவும் உருவகம் செய்துள்ளனர். இவ்வாறு கல்விச்செல்வத்தை பயன்படுத்தி , சொல்வளம் மிக்க கவிதையை உருவாக்கி, அவையை அழகு செய்யும் திறம் , சிறந்த கல்விச்செல்வம் என்று நீதிநெறி விளக்கிகத்தில் உள்ள பாடல் உணர்த்துகிறது.
இப்பாடல் கல்விச் செல்வம் கொண்ட ஒருவனது வாழ்க்கையானது கற்புடைய மனைவியுடன் இல்லறம் நடத்துவதற்கு ஒப்பானது என்பதைத் தெளிப்படுத்தியுள்ளது. கற்புடைய மனைவியுடனும் மக்களுடனும் வாழும் ஒருவனது வாழ்க்கை இன்பமாக இருப்பதுபோல், கல்விச் செல்வம் கொண்டவனின் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும் என்பது இப்பாடல் உணர்த்தும் உட்பொருள் ஆகும்.
தொடர்ந்து, கல்வியைக் கற்றவர்களை என்றும் கல்வி கற்றவர்களே நாடிச் செல்வார்கள் என்று மூதுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நற்றா மரைக்கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்புஇலா
மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்
அதாவது தாமரை பூத்திருக்கும் குளத்தை , அன்னப் பறவை தேடிச் செல்வது போல, கல்வியாளரைக் கல்வியாளரே தேடிச் செல்வார்கள். காக்கையானது காட்டில் இருக்கும் பிணத்தை விரும்பிச் செல்வது போல , கல்வியற்ற மூடரை மூடரே போய்க்காண்பார் என்று மூதுரை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கல்வி கல்லாதவர்களிடம் , கல்வி கற்றவர்கள் சேர்ந்தால் அவர்கள் தங்களின் கல்வி அறிவை இழக்க நேரிடும் என்று நன்னெறியில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கூறியிருக்கிறார்.
கல்லா அறிவின் கயவர்பால் கற்றுஉணர்ந்த
நல்லார் தமதுகனம் நண்ணாரே – வில்லார்
கணையில் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புணையில் புகும்ஒண் பொருள்
கனம் இல்லாத தெப்பத்திலே சேர்ந்த கனமான பொருளும் இலகுவாகிவிடும். அதுபோல் கல்வி அறிவில்லாதவர்களிடம் , கற்று உணர்ந்த நல்லவர் சேர்ந்தால் , அவர் தம்முடைய அறிவை இழந்து விடுவர் என்று துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி கற்ற ஒருவனால் கற்றவற்றை விளக்கி கூற இயலவில்லை என்றால் அந்த கல்வியால் பயனில்லை.
எத்துணைய வாயிலும் கல்வி இடமறிந்து
உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும் – உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்ற முடைத்து
என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் இக்கருத்தை விளக்கியுள்ளது.
ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்றிருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை. கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றிபெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று இப்பாடலில் குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக்கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் – நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று.
என்னும் பாடலில், அவையில் கருத்துகளை எடுத்துக் கூற இயலாமல் இருப்பவனின் கல்வியும், அவையில் அச்சம் இல்லாமல் கூறும் ஆரவாரச் சொல்லும், பிறருக்குக் கொடுக்காதவன் என்னும் பழி ஏற்படும் என்று உணராமல் பிறருக்கு வழங்காமல் வைத்து உண்பவனின் செல்வமும், வறுமை அடைந்தவனின் அழகும் இருப்பதை விடவும் இல்லாமல் போவதே நல்லது என்று கூறப்படுகிறது. இதை ‘பூத்தலின் பூவாமை நன்று’ என்னும் தொடர் நன்றாக விளக்குகிறது.
நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை என்னும் கொன்றை வேந்தன் நிலையான கல்வியைக் கற்றவர் என்பவர் சொன்ன சொல்லை காப்பாற்ற கூடியவர் ஆவார் என்று கூறுகிறது. மேலும் , ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று உலக நீதியிலும் கல்வி பயிலாமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி கற்று இறவாப் படைப்புகளை வழங்கும் படைப்பாளிக்கு மலரவன் என்று போற்றப்படும் நான்முகன் ஒப்பாகமாட்டான் என்பதை,
கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் – மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு
என்னும் நீதி நெறியின் பாடல் உணர்த்துகிறது.
தமிழ்ப் புலவர்களுக்கு நான்முகன் எவ்வாறு ஒப்பாக மாட்டான் என்பதைப் பார்த்தால்,நான்முகன் படைக்கின்ற மனித உடல்கள் எதுவுமே நிலையாக இருப்பதில்லை. அவை அழிந்து விடுகின்றன. ஆனால் வளம் பொருந்திய தமிழில் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ள கவிதைகள் நான்முகனின் படைப்புகளைப் போல் அழிவதில்லை. அவை காலம் கடந்தும் நிலைத்த புகழுடன் விளங்குகின்றன. எனவே தமிழ்ப்புலவர்களின் படைப்புகளுக்கு நான்முகனின் படைப்புகள் ஒப்புமை ஆகா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆத்திசூடியில் எண் எழுத்து இகழேல் மற்றும் கொன்றை வேந்தனில் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்று ஒரே கருத்தை முன்வைக்கின்றது.கணிதத்தையும் இலக்கியத்தையும் இகழ்ந்து ஒதுக்கி விடக்கூடாது.மேலும், கணக்கும் இலக்கியமும் கண்களைப் போல சிறப்புடையவையாகக் கருதப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த சூழலிலும் ஒருவர் கற்ற கல்வியானது புகழுறவும் , போற்றப்படவும் கைக்கொடுக்கும் என்பது திண்ணம். மேலும் , கல்வியில் சிறந்து விளங்கினால் பகைவரும் நட்பு கொள்ள விரும்புவர். ‘எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்’ எனும் வெற்றி வேற்கைக்கு ஏற்ப எக்குலத்தில் பிறந்திருந்தாலும் , யாராக இருந்தாலும் கற்றவரை எல்லாரும் மதிப்போடு வரவேற்பார்கள். இதனால் உலகமே கற்றவர்கள் வசப்படும் என்றும் மொழியலாம்.
ஆகவே , வாழ்வின் உண்மை நோக்கத்திற்கு இட்டுச் செல்லும் கல்வியை உயிர் மூச்சைப் போல் போற்ற வேண்டும். ‘ஒதுவது ஓழியேல்’ எனும் ஆத்திசூடிக்கிணங்க கல்வியை கற்காமல் இருந்து விடக்கூடாது. நீதிநூலில் கல்வியை பற்றியக் கருத்துகளை நினைவில் கொண்டு கல்வி கற்க வேண்டும்.
பிற்கால நீதிநூல்களில் இல்லறம் பற்றிய கருத்துகள்
திருமணம் பலருக்குச் சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்துவிடுவதை நம்மால் எண்ணிப் பார்க்காமலும், வருந்தாமலும் இருக்க முடியவில்லை.கணவனுடன் வாழமறுத்துத் தன் பிறந்தகம் சென்ற மனைவி, மனைவியைக் கைவிட்டு நீண்ட காலமாக விலகி இருக்கும் கணவன் இவர்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வழியே இல்லையா? இருக்கின்றது. நீதி நூல்களைப் புரட்டி பார்த்தோமானால் ஒரு சிறந்த இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கணவன் மற்றும் மனைவிக்கு எடுத்துரைக்கின்றது.
மனைவி என்பவள் ஒரு குடும்பத்தின் மங்கலமாக திகழ்கிறாள். தன்னையும் காத்து, தற்கொண்டானையும் காத்து, தகைசார்ந்த சொற்காத்துச் சோர்விலாது வாழ்பவள் மனைவி ஆவாள். ‘ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு’ எனும் கொன்றை வேந்தனுக்கேற்ப கணவனை தேர்ந்தெடுத்து , அவனுடன் ஒரு வீட்டில் வாழ்வது மனைவிக்குச் சிறப்பாகும். மேலும் , ஒரு மனைவி கணவனுடையச் சொல்லுக்கு மாறுபடாமல் நடப்பதே மகளிர்க்கு நிறைவானது என்பதை ‘கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை’ என்ற கொன்றை வேந்தன் விளக்குகிறது.
அதனைத் தொடர்ந்து,‘துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு’ எனும் தொடர் கணவனுக்குத் துன்பம் நேரிட்டபோது , மனம் துடிதுடிக்காத மனைவி என்பவள் வயிற்றில் கட்டிவைத்துள்ள நெருப்பை போன்றவளாக கருதப்படுவாள் என்பதை வலியுறுத்துகின்றது.ஆகையால்,ஒரு நல்ல மனைவி என்பவள் கணவனுக்கு துன்பம் நேரிடும் பொழுது பக்கபலமாக இருக்க வேண்டும்.
கணவனைப் பற்றி அவதூறுகளைப் பேசித்திரியும் பெண், ஒரு குடும்பதிற்கு எமன் என்று சொல்லக்கூடியவள் ஆவாள் என்று ஓளவையார் கொன்றை வேந்தனில் ‘தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்’ என்று கூறியிருக்கிறார். தன் கணவனைப் பாதுகாப்பது குடும்ப பெண்ணுக்குச் சிறப்பாகும்.வெற்றி வேற்கையில் ‘குலமகட்கு அழகுதன் கொழுநனைப் பேணுதல்’ எனும் தொடர் இக்கருத்தை உணர்த்துகிறது. மேலும், ‘பெண்டிர்க்கு அழகுஎதிர் பேசாது இருத்தல்’ எனும் தொடர் வெற்றி வேற்கையில் கணவனை எதிர்த்துப் பேசாமல் இருப்பது பெண்ணுக்குச் சிறப்பு என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.
நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட மனைவி ஒரு வீட்டிற்குக் கிடைத்து விட்டால் அந்த வீடு சொர்கமாக திகழும்.அதுவே கொடுமையான பழக்க வழக்கங்களைக் கொண்ட மனைவி வீட்டிற்கு வந்தால் அந்த வீடு நரகமாகும்.இதனை மூதுரையில் ஒளவையார் தெளிவாக பாடியுள்ளனர்.
இல்லாள் அகத்துஇருக்க இல்லாது ஒன்றுஇல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவிஇல்
புலிகிடந்த தூறாய் விடும்.
என்னும் பாடலில் உத்தமமான மனைவி , ஒரு இல்லத்துக்கு அமைந்து விட்டாளானால், அந்த வீட்டில் எந்த குறையும் இருக்காது. மனைவி இல்லாமல் போயினும் , மனைவி கொடுமையான சொற்களைக் கூறினாலும் , அந்த இல்லமானது புலி கிடந்த புதர் போல் ஆகிவிடும் என்று இப்பாடல் விளக்குகிறது.
கணவன் என்பவன் ‘தையல் சொல் கேளேல்’ என்னும் ஆத்திசூடிக்கேற்ப மனைவியின் பண்பற்ற சொற்களைக் கேட்டு அதன்படி நடக்கக்கூடாது.மேலும், ‘மெல்லி னல்லாள் தோள் சேர்’ என்னும் ஆத்திச்சூடியில் ஒளவையார் கூறியப்படி கணவன் பண்புள்ள மனைவியோடு கூடிவாழ வேண்டும். இதே கருத்தை கொன்றை வேந்தனிலும் ஒளவையார் கூறியிருக்கிறார். ‘இல்லறம் அல்லது நல் அறம் அன்று’ என்ற தொடரில் மனைவியோடு கூடி வாழ்வது நல்வாழ்வு இல்லாவிடில் அது நல்வாழ்வு ஆகாது என்று வலியுறுத்துகிறார்.
ஒருவர் வளமான நிலம் மற்றும் செல்வத்தை பெற்றிருந்த போதிலும் மனைவி என்று ஒருவள் இல்லையானால் அவருக்கு சுகம் என்பது இல்லை என்பதை வெற்றி வேற்கை ‘நல்ல ஞாலமும் வானமும் பெறினும் , எல்லாம் இல்லை இல்இல் லோர்க்கே’ என்று எடுத்துரைக்கின்றது.தொடர்ந்து, தன் மனைவியை தனியாக வீட்டில் இருக்க செய்து, பிறருடைய வீட்டுக்குச் செல்லும் அறிவற்றவனும் பதர் போன்றவன் என்று ‘தன்மனை யாளைத் தன்மனை இருத்திப் , பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே’ என்று குறிப்பிடுகின்றது.
இல்லறம் சிறப்பாக அமைய வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.இதனை நன்னெறி,
காதல் மனையாளுல் காதலனும் மாறுஇன்றித்
தீதில் ஒருகருமம் செய்பவே – ஓதுகலை
எண்ணிரண்டு ஒன்றுமதி என்முகத்தாய் நோக்குமால்
கணிஇரண்டும் ஒன்றையே காண்.
இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளைப் பார்ப்பது போல் , அன்புடைய மனைவியும் அவள் கணவனும் உள்ளத்தில் மாறுபாடு இல்லாமல் இருந்தால், அவர்கள் செய்யும் காரியம் குற்றமில்லாமல் இருக்கும் என்று இப்பாடல் தெரிவிக்கின்றது.
இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களைத் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை நீதிநூல்களில் இருந்து அனைவரும் பின்பற்றலாம்.
Comments
Post a Comment